search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் சரிவு"

    போடி மெட்டு மலைச்சாலையில் மண் சரிவுகள் சீரமைக்கப்பட்டு இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    மேலச்சொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு போடிநாயக்கனூர் பகுதியில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் போடி மெட்டு மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் பாறைகள் உருண்டும், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது.

    இதனால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு செல்பவர்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் இருசக்கர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு நேற்று காலை முதல் இரவு வரை முழு வீச்சில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் இருந்து வந்தவர்களும் போடிமெட்டு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    நேற்று இரவு வரை நடந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. மேலும் தற்போது மழையும் குறைந்துள்ளதால் போடி மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை முதல் மலைச்சாலையில் பயணிக்க தொடங்கினர். மணல், கருங்கல், ஜல்லி, விறகு போன்ற அதிக எடை ஏற்றிச்செல்லும் 12 சக்கரம் உடைய கனரக வாகனங்கள் மலைச்சாலையில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளால் மண் சரிவு ஏற்படுவதாகவும், இதுபோன்ற வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    போடி மெட்டு மலைச்சாலையில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மேலச்சொக்கநாதபுரம்:

    தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. போடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சி, இரட்டை வாய்க்கால் பெரியாறு ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    கொட்டக்குடி, குரங்கணி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்த நிலையில் மாலையில் இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது. இதனால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்து மண் சரிவு ஏற்பட்டது.

    ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வாகனங்கள் இயக்க அனுமதி அளித்திருந்த நிலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற வாகனங்கள், தோட்டத்தொழிலாளர்களின் ஜீப்புகள் ஆகியவை போடி முந்தல் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. இதே போல கேரளாவில் இருந்து வந்த வாகனங்களும் போடி மெட்டு சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இரவோடு இரவாக பொக்லைன் எந்திரங்களை கொண்டு வந்து மண் சரிவு, பாறை சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் பல்வேறு இடங்களில் இன்னும் பாறைகள் அகற்றும் பணி நிறைவடையாததாலும் மறு உத்தரவு வரும் வரை இந்த சாலையில் எந்த வாகனங்களும் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போடியில் இருந்து மூணாறு உள்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் நேற்று பணிக்கு சென்ற தொழிலாளர்களும் வீடு திரும்ப முடியாமல் சோதனைச்சாவடியிலேயே இரவு வரை காத்திருந்தனர்.

    தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை முழு வீச்சில் விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
    தொடர் மழை மற்றும் மண்சரிவால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம்-ஏற்காடு மலைப்பாதை, குப்பனூர் மலைச்சாலை ஆகிய 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் ஏற்காட்டுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து மலைப்பாதையை சரி செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து நள்ளிரவு வரை ஏற்காட்டில் கன மழை கொட்டியது. இதனால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் சாலையில் 7 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    சாலை ஓரங்களில் மண், மற்றும் சிறு பாறைகள் உருண்டு விழுந்துள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் பணி செய்யப்படுவதாக நெடுஞ்சாலை துறையினர் கூறினர். தொடர் மழை மற்றும் மண்சரிவால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் ஏற்காடு ஒண்டிகடை பகுதி, அண்ணா பூங்கா ஏரி பூங்கா, மற்றும் படகு இல்ல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால்

    மலை பாதையில் மேலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தொடர் மழையால் காப்பி விவசாய தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.




    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீடு கட்டுமான பணிக்காக மணல் அள்ளியபோது மண் சரிந்து பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன், விவசாயி. இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 21), பட்டதாரி. இவரது நண்பர் பேளூரைச் சேர்ந்த முத்து.

    லோகேஸ்வரன் வீட்டு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக மணல் தேவைப்படுவதால் லோகேஸ்வரனும் அவரது நணபர் முத்துவும் பேளூர் வசிஷ்டநதி தடுப்பணை அருகே மணல் எடுக்க முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் நள்ளிரவில் அங்கு சென்று குழி தோண்டி மணல் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர் பாராதவிதமாக மணல் சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் மணலுக்குள் புதைந்தனர். ஆனால் முத்து மட்டும் தட்டுத்தடுமாறி வெளியே வந்து உறவினர்களிடம் வி‌ஷயத்தை கூறினார்.

    உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லோகேஸ்வரனை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். காயம் அடைந்த முத்துவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு லோகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாசில்தார் வள்ளிதேவி, மற்றும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி மலைரெயில் பாதையில் ஹில்குரோவ்- ரன்னிமேடு ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது.

    குன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மலைரெயில் பாதையில் ஹில்குரோவ்- ரன்னிமேடு ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதை அறியாமல் நேற்று காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வழக்கம்போல் மலைரெயில் இயக்கப்பட்டது. ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே சென்றபோது, மண் சரிவு ஏற்பட்ட இடத்துக்கு முன்பாக மலைரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    உடனே ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றினர். இதையடுத்து மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. மண் சரிவு காரணமாக வழக்கம்போல் குன்னூருக்கு காலை 10.30 மணிக்கு வந்து சேரும் மலைரெயில், அரை மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து காலை 11.10 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.இதனிடையே பலத்த மழை காரணமாக குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் வெலிங்டன் கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி அருகில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்னூர் தீயணைப்பு படையினர் மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
    திருவண்ணாமலை அருகே கிணற்றில் தூர்வாரும் போது ஏற்பட்ட மண் சரிவில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே உள்ள வடமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நல்லவன்பாளையத்தில் உள்ள நாராயணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மண்ணில் புதைந்து கிடந்த ராஜேந்திரனை மீட்டனர்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வால்பாறை பகுதியில் எஸ்டேட் மற்றும் குடியிருப்புகளில் மண் சரிவு -விரிசல் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

    மழைகாரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும் , பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி, நடுமலை,சோலையார்,கருமலை,உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மண்சரிவும் பூமி விரிசலும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எஸ்டேட் நிர்வாகங்கள் பாதுகாப்பு நலன் கருதி தொழிலாளர்களை தேயிலை இலை பறிக்கும் பணிக்கு அனுப்பவில்லை. அய்யர்பாடி, சோலையார் எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எஸ்டேட் நிர்வாகங்கள் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேறு பகுதிகளில் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, விரிசலை சிலர் நிலநடுக்கம் என நினைத்து பீதியில் உள்ளனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, பூமியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை நிலநடுக்கம் என நினைத்து பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் கடந்த ஓரு வாரத்திற்கு முன்புவரை கனமழை பெய்தது. தற்போது மழை நின்று வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

    மழை காரணமாக ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி வடியத் தொடங்கி வருவதால் பல இடங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் மண்சரிவும், பூமியில் விரிசல்கள் ஏற்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி, நடுமலை, சோலையார், கருமலை, உருளிக்கல் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் மண்சரிவும் பூமி விரிசலும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் எஸ்டேட் நிர்வாகங்கள் பாதுகாப்பு நலன் கருதி தொழிலாளர்களை தேயிலை இலை பறிக்கும் பணிக்கு அனுப்பவில்லை. அய்யர்பாடி, சோலையார் எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் எஸ்டேட் நிர்வாகங்கள் அப்பகுதி தொழிலாளர்களுக்கு வேறு பகுதிகளில் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வால்பாறை எஸ்டேட் பகுதியில் மண் சரிவு, விரிசலை சிலர் நிலநடுக்கம் என நினைத்து பீதியில் உள்ளனர்.
    குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மக்களுக்கு நேற்று வரை 63 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். #keralarain
    நாகர்கோவில்:

    கேரளாவில் தொடர் மழை காரணமாக மண் சரிவு மற்றும் வெள்ள பாதிப்பை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

    நாகர்கோவிலில் இருந்தும் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குமரியில் இருந்து நேற்று வரை 63 வாகனங்களில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். தற்போது படிப்படியாக கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. முகாமில் இருக்கும் பொதுமக்களும் வீடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். மழை ஓய்ந்த நிலையில் கொசுக்கள் உற்பத்தியாகி விஷக்காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக நாகர்கோவில் நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் வழங்கப்பட்டது. 20 கொசு மருந்து தெளிப்பான் மேலும் 5 பெரிய டப்பாக்களில் ரசாயன மருந்துகளும் நேற்று கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டு எந்திரங்கள் சரியாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் வழங்கிய நிவாரண பொருட்களையும் கேரளாவிற்கு அனுப்பி வைத்தார். #keralarain 
    கண்ணமங்கலம் அருகே மண் சரிந்து இளம்பெண் உயிரோடு புதைந்து பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளத்தில் துருகம் கிராம சாலையோரம் வசிப்பவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி சத்யா (வயது 22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. 1½ வயதில் ஹரிவர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில், புதிதாக கட்டும் வீட்டிற்கு தேவையான களிமண்ணை எடுப்பதற்காக ராமச்சந்திரனும், அவரது மனைவி சத்யாவும் இன்று காலை வண்ணாங்குளம் ஏரிக்கு சென்றனர்.

    அப்போது, ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கி சத்யா மண் அள்ளியதாக தெரிகிறது. அப்போது, சத்யா மீது திடீரென மண் சரிந்தது. இதில் மண்ணுக்குள் அவர் உயிரோடு புதைந்தார்.

    அதிர்ச்சியடைந்த கணவர் மண்ணை தோண்டி மனைவியை மீட்க போராடினார். ஆனால், சத்யா மண்ணுக்குள் புதைந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிணமாக மீட்கப்பட்ட மனைவியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் ராமச்சந்திரன் தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று விட்டார். இதுப்பற்றி, கிராம நிர்வாக அலுவலர் ரமேசுக்கு தகவல் கிடைத்தது. கண்ணமங்கலம் போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப்பதிந்து கணவர் ராமச்சந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம் அருகே குட்டையில் விளையாடிய போது மண்சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆனைக்காரன்பாளையத்தை சேர்ந்த தேவேந்திரன் மகள் சியாமளா (வயது 10), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் மகள் வர்சினி (12). சியாமளா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பும், வர்சினி 7-ம் வகுப்பும் படிந்து வந்தனர்.

    பள்ளி விடுமுறை என்பதால் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் ராஜகாலனி கீழத்தெருவை சேர்ந்த வக்கீல் ராமமூர்த்தி வீட்டுக்கு மாணவி சியாமளாவும், வர்சினியும் சென்று இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள கொம்புகாரன் குட்டையில் ஆழமாக மண் எடுக்கப்பட்ட குழிகளில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது 2 பேரும் இறங்கி விளையாடிய குழியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகள் 2 பேரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லாததால், அங்கிருந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சியாமளாவும், வர்சினியும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்தசம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மயிலாடு துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குட்டையில் அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாகவும் , அந்த குழியை சரிசெய்யாமல் விட்டுச்சென்றதுதான் சிறுமிகள் சாவுக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, உதவி கலெக்டர் தேன்மொழி, மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #Kerala #HeavyRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த பருவ மழை 12-ம் தேதி வரை தொடரும் என கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக கன மழைபெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. 

    பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, கன்னூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கன மழைக்கு தற்போது 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. #Kerala #HeavyRain
    ×